Ad sense

Wednesday, June 10, 2015

அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை - அவர்கள் அதில் நுழைய.../ பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம் / நோன்பின் பலனை புரிந்து கொள்வோம்!

அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை - அவர்கள் அதில் நுழைய
ஸூரத்துல் அஃராஃப்(சிகரங்கள்)

7:46. (நரகவாசிகள், சுவர்க்க வாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; அதன் சிகரங்களில் அநேக மனிதர்கள் இருப்பார்கள்; (நரக வாசிகள், சுவர்க்க வாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள்; அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!)” என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை - அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கின்றார்கள்.

7:47. அவர்களுடைய பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே” என்று கூறுவார்கள்.
 
7:48. சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை - அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு - அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்: “நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!”

7:49. “அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் இவர்கள் தானே? (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” என்றும் கூறுவார்கள்.

7:50. நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, “தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்” எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்: “நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்” என்று கூறுவார்கள்.
7:51. (ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது; எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.

7:52. நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தை கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.

7:53. இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த) இறுதியையன்றி வேறு எதையும் எதிர்பார்க்கிறார்களா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது, இதற்குமுன் அதனை முற்றிலும் மறந்திருந்த இவர்கள், “நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் சத்திய(வேத)த்தையே கொண்டு வந்தனர், எங்களுக்குப் பரிந்து பேசக்கூடியவர்கள் எவரும் இருக்கின்றனரா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசட்டும்; அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அப்படியாயின், நாங்கள் முன்செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டு வேறு (நன்மைகளையே) செய்வோம்” என்று கூறுவார்கள் - நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டார்கள், அவர்கள் கற்பனை செய்து வந்தவை அவர்களை விட்டு மறைந்து விடும்.

7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

7:55. (ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.

7:56. (மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது.

பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்
ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி-முஸ்லீம்)

மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன், ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை
.
மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30

நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.

ஆதம்(அலை) அவர்களை அழைத்து வானவர்களின் முன்பாக நிருத்தி அவற்றின் பெயர்களை கேட்டான் வானவர்கள் கூற முடியாத பதிலை ஆதம் (அலை) அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன்.2:33

நீங்கள் அறியாதவற்றை நான் அறிந்தவன் என்று உங்களுக்குக் கூறவில்லையா? என்று வானவர்களிடம் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களுக்குப் பணியும்படிக் கூறினான். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வானவர்கள் அனைவரும் பணிந்தனர். இப்லீஸ் என்ற ஷைத்தான் மட்டும் பணிய மறுத்தான். திருக்குர்ஆன் 2:34

எனது கட்டளையை உனக்கு புறக்கணிக்கச் செய்தது எது ? என்று இப்லீஸை நோக்கி இறைவன் கேட்டதற்கு, நான் உயர்ந்தவனா? அவர் உயர்ந்தவரா ? என்ற ஏற்றத் தாழ்வுகளை திமிர் தனமாக இறைவனுக்கே விளக்கி (?) விட்டு இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட மறுத்தான் இப்லீஸ் !

”எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை காண்டு விட்டாயா?அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?” என்று (இறைவன்) கேட்டான்.

”நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்” என்று அவன் கூறினான்.

”இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன்மீது எனது சாபம் உள்ளது” என்று (இறைவன்) கூறினான்.38:75 லிருந்து 78 வரையிலான வசனங்கள்.

உயர்ந்தோன், தாழ்ந்தோன் என்ற ஏற்றத்தாழ்வுகளை இறைவனிடமே கற்பிக்க முனைந்த தலைக்கனம் பிடித்த ஷைத்தான் இறைவனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டான். அவ்வாறு வெளியேற்றப்பட்டவன் மனித குலத்தை அழிவில் ஆழ்த்தாமல் விடமாட்டேன் என்றுக் கூறி வெளியேறினான்.

இப்லீஸினால் ஆதம்(அலை) அவர்களுக்கு ஆபத்து (வழித் தவறுதல்) ஏற்படும் என்பதை முன்கூட்டியே அவர்களுக்குக் கூறி எச்சரிக்கை செய்து, இன்ன மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்றும் தடை வித்தித்தான் இறைவன். திருக்குர்ஆன் 2:35

தடையை மீறினார் வழி தவறினார்.எதன் பக்கம் நெருங்காதீர்கள் என்று இறைவன் தடை விதித்திருந்தானோ அதையே சிறந்தது என்றும் அதன் மூலமே நிரந்தர இன்பமும், நிலையான வாழ்வும், இருப்பதாகக் கூறி அவரை இலகுவாக வழி கெடுத்தான் இப்லீஸ்.

(20:120).அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப்பற்றியும்,அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)

(20:121).அவ்விருவரும் அதிலிரிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார். இன்று வரையிலும் அதே பாணியில் அதிகமான மக்களை வழிகெடுத்து வருகிறான் ஷைத்தான்

அன்று — அந்த மரத்தின் கனி,

இன்று — மது, மாது, சூது ( இறைவனால் தடுக்கப்பட்ட இன்னும் பல)
மது, மாது, போன்றவைகள் இறைவனால் தடைசெய்யப்பட்டவைகள், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவைகள், நரகில் தள்ளக் கூடியவைகள். என்பதை நன்றாக அறிந்திருந்தும் அவற்றில் தான் மன அமைதி கிடைக்கிறது, அழியக்கூடிய உடல் அழிவதற்கு முன் அனுபவித்துக் கொள் என்ற தீய சிந்தனையை விதைத்து இறைவன் தடைசெய்த தீமைகளை மன அமைதிக்கென்று பொய்யாக ஒரு சிலரை தொடங்கச் செய்து இன்று அதிகமான மக்களின் மன அமைதியையும், உடல் நலத்தையும் கெடுத்து உலகையே குழப்பத்தில் ஆழ்த்தி விட்டான் ஷைத்தான் என்ற இப்லீஸ்.

படிப்பினைகள்ஆகு என்று சொன்னதும் ஆகிவிடக் கூடிய, அழிந்து விடு என்று சொன்னதும் அழிந்து விடக்கூடிய சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு ஆதம்(அலை) அவர்களின் செயல் கோபமூட்டக் கூடியதாகவே இருந்தாலும் கோபம் கொள்ளாமல் அவர் வருந்தித் திருந்தி தனது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வதற்காக இட மாற்றம் மட்டும் செய்து சந்தர்ப்பம் வழங்கினான் கருணையாளன் இறைவன்.

அறிவு கொடுக்கப்பட்ட ஆதம்(அலை) அவர்களும், அவரது மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் இறைவனின் தடையை பகிரங்கமாக மீறியக் குற்றத்திற்காக தங்களை மிகப்பெரிய பிடியாகப் பிடிக்காமல் இடமாற்றம் மட்டும் செய்து வாழ விட்ட தயாளனின் கருணையை நினைத்து தொடர்ந்து அழுது கண்ணீர் வடித்தனர்.

அவர்களது உள்ளம் வருந்தி கண்கள் கண்ணீரை வடிப்பதைத் தவிற வேறொன்றும் அறியாதவர்களாயிருந்ததை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு பாமன்னிப்புக்கோரும் வார்த்தைகளை அறிவித்தான்.

(2:37) (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(7:23)”எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்” என்று அவ்விருவரும் கூறினர்.

படிப்பினைகள்உயர்ந்த படைப்பு நானா ? அவரா ? என்று ஷைத்தான் அல்லாஹ்விடம் வாக்குவாதம் செய்ததன் பின்னர் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது உயர்ந்தவர் யார் ? தாழ்ந்தவர் யார் ? என்பது தெளிவாகும்.

ஆதம், ஹவ்வா(அலை) அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி பாவமன்னிப்புக்கோரி இறைவனின் மகத்தான மன்னிப்பைப் பெற்று மீண்டும் இறையடியார்களாக நீடித்ததால் இவர்களே உயர்ந்தவர்கள்.

இப்லீஸ் என்ற ஷைத்தானோ தான் செய்த தவறுக்கு ஏற்கமுடியாத காரணத்தை கூறி அதிலேயே நீடித்து இறையருளுக்கு தூரமாகி இறைவனின் சாபத்திற்கும் உள்ளானதால் இவனே தாழ்நதவன்.

 நமது அன்னை, தந்தையாகிய ஆதம், ஹவ்வா(அலை) அவர்களின் வழியைப் பின்பற்றி நாம் செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டு அதற்காக வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்ர்புக் தங்களை கோரி சீர்திருத்திக் கொண்டால் இறையருளுக்கு நெருக்கமாகிய ஆதம்(அலை) அவர்களின் வழித்தோன்றலாக இருப்போம்.

இறைவனின் கட்டளையைப புறக்கனித்த குற்றத்திற்கு வருந்தாமல் ஏற்க முடியாத காரணத்தைக் கூறி கொண்டிருந்தால் இறைவனின் சாபத்திற்கு உள்ளான ஷைத்தானின் வழியைப் பின்பற்றியவாராவோம்.

அல்லாஹ் அதிலிருந்தும் அனைத்து மக்களையும் காத்தருள்வானாக !
இறைவன் கோப குணம் கொண்டவனல்ல, கருணையாளன் என்பதற்கு ஆதம்(அலை) அவர்கள் செய்த இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றத்தை மன்னித்தது உலகம் முடியும் காலம் வரைத் தோன்றும் மனித குலத்திற்கு இறைவன் மன்னிப்பவன், கருணையாளன் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும்.

1 — உலகம் முடியும் காலம் வரை,
2 — மனிதனின் தொண்டைக் குழியை உயிர் வந்தடையும் வரை,
பாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்திருப்பதாக அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் கூறுகின்றக் காரணத்தினால், பாவங்கள் அதிகம் மன்னிக்கப்படுவாக வாக்களிக்கப்பட்ட புனித ரமளான் மாதத்தில் கடந்த காலத்தில் செய்தப் பாவங்களைப் பட்டியலிட்டு இறவா! நீ எங்களை மன்னிக்கவில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளியாகி விடுவோம் என்று அழுதுக் கேளுங்கள்.

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி-முஸ்லீம்)

3:104 நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
நோன்பின் பலனை புரிந்து கொள்வோம்!

அல்லாஹ்வின் கிருபையால் ரமழானை சந்திக்கும் வாய்ப்பினை அல்லாஹ் நம்மனைவருக்கும் அல்லாஹ் தந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.
இந்த ரமழான் மாதத்தின் சிறப்பை அல்லாஹ் கூறுகிறான்:
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது;

ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;

அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (2:185)

இந்த இறக்கட்டளையில் ரமழான் மாதத்தின் சிறப்பையும் அதன் காரணத்தையும் விசுவாசிகள் நோன்பு நோற்பது கட்டாயக்கடமை என்பதையும் தெளிவாக விளக்கி விட்டான்.

இன்று முஸ்லிம்களில் எத்தனைபேர் இதனை செயல்படுத்தக்கூடியவர்களாக இருக்கிறார்கள்? அல்லாஹ்வே “உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; ” என்று கூறிய பின்னரும் இன்று முஸ்லிம்களில் எத்தனை பேருக்கு ரமழானில் நோன்பு நோற்பது இலகுவானதாக தெரிகிறது? எத்தை பேர் நோன்பு நோற்காமல் அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.

நோயாளிகளாக, பயணிகளாக இருப்பவர்களை விட்டு விடுங்கள். அவர்களுக்கு பின்னால் நோற்றுக் கொள்ளும்படி சலுகை அளித்துள்ளான்.  நல்ல திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும், பிரயாணத்தில் இல்லாமல் உள்ளூரிலேயே இருந்து கொண்டிருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் இந்த நோன்பை நோற்பதற்கு சிரமமானதாகத்தானே தெரிகிறது.

ரமழானில் நோன்பை விட்டுவிடுவது மட்டுமல்லாமல் பகிரங்கமாக பீடி சிகரெட் ஊதித் தள்ளுவதும் காபி டீ என குடிப்பதுமாக பெரும்பான்மை முஸ்லிம்கள் இருக்கின்றனர். அவர்களது அறிவில் நோன்பு நோற்பது சிரமமான செயலாக தெரிகிறதே அல்லாமல் எளிதான செயலாகத் தெரியவில்லை.

ரமழானில் நோன்பு நோற்பது ஏன் சிரமமான காரியமாகத் தெரிகிறது நோன்பின் மூலம் அல்லாஹ் மனிதனின் இயற்கை அத்தியாவசியத் தேவைகளான உண்பது, குடிப்பது, போகிப்பது போன்ற இன்பங்களிலிருந்து தற்காலிகமாக தடுத்து வைத்துள்ளான். அல்லாஹ்வின் இக்கட்டளையை யார் வாழ்வதற்காக இம்மூன்று காரியங்களை செய்கிறார்களோ அவர்களுக்கு எளிதாக இருக்கும்.

அதற்கு மாறாக யார் இம்மூன்று காரியங்களையும் செய்வதற்கென்றே வாழ்கிறார்களோ அவர்களுக்கு நோன்பு நோற்பது மிகமிக கடினமான காரியமாகவே தெரியும். ஆக அவர்கள் இவ்வுலக வாழ்க்கை ஒரு சோதனை என்பதை மறந்து வாழ்கிறார்கள்.

பள்ளியில் படிக்கும் காலங்களில் பள்ளிக்கு படிக்கவே நாம் வருகிறோம். எனவே சாப்பிடுவது, குடிப்பது உறங்குவது, கேளிக்கைகளில் ஈடுபடுவது போன்ற காரியங்கள் நமது அசல் நோக்கமல்ல.

தேவைக்கு மட்டுமே அவற்றில் ஈடுபட்டுவிட்டு அதிகமான நேரத்தைப் படிப்பதிலேயே செலவிடவேண்டும் என்று புத்திசாலித்தனமாக  விளங்கிப் படிப்பதில் அதிகம் கவனம் செலுத்தியவர்கள் நன்றாகப் படித்து தேறி நாளை உயர்ந்த பதவிகளை அடைந்து உல்லாச வாழ்க்கை வாழமுடியும்.

அதற்கு மாறாக அறிவு குறைந்த மாணவர்கள் தனது பெற்றோர்கள் தான் படிக்கும் காலங்களில் எனக்கு  அனுபவிப்பதற்கென்றே பணம் அனுப்பியுள்ளனர்.  இப்போது அனுபவிக்காவிட்டால் வேறு எப்போது அனுபவிப்பது? பெற்றோர்கள் மாதா மாதம் பணம் அனுப்பி வைப்பது நாம் அனுபவிக்கத்தானே என குறுகிய எண்ணத்தில் படிப்பைத் தவிர மற்ற விஷயங்களில் ஜாலியாக ஈடுபட்டு சந்தோசமாக நாட்களைச் செலவிட்டான்.

அப்போது தெரியுமா அதனால் ஏற்படும் நஷ்டங்கள்?  பள்ளி இறுதி ஆண்டில் பரிட்சையில் தோல்வியுற்று அதனால் பல இழப்புகளை சந்த்தித்து பெற்றோருக்குப்பின் முறையான வருமானம் இல்லாமல் வறுமையில் வாடி பெருங்கஷ்டங்களை அனுபவிக்கும்போதுதான் தான் செய்தது மிகப்பெரிய தவறு என்பதை உணர்வான்.  ஆனால் காலம் கடந்து வருந்துவதால் இப்போது பலனளிக்கவா போகிறது?

இது போல் அசலான மறு உலக வாழ்க்கையை மறந்து அழிந்து போகும் அற்பமான இவ்வுலக வாழ்க்கையை பெரிதாக நினைத்து இங்கு அனுபவிப்பதையே பெரும் பேறாக கருதி செயல்படுகிறவன் மட்டுமே அல்லாஹ்வின் கட்டளையை நிராகரித்தும் வாழ முடியும்.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்காமல் அதனால் ஏற்படும் இழப்பு, மாணவனுக்கு படிக்கும் காலத்தில் படிப்பில் கவனம் செலுத்தாத காரணத்தினால் ஏற்படும் இழப்பு அவன் வெளி உலகைச் சந்திக்கும்போது அதன் நஷ்டத்தை உணர்ந்து கொள்வானோ அதே போல் இவனும் இந்த நஷ்டத்தை மறு உலகில் காணப்போகிறான்.

புத்திசாலி மாணவன் படிக்கும் காலத்தில் எப்படி தான் படிக்க வந்த நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு உண்பதிலும், குடிப்பதிலும், உறங்குவதிலும் கேளிக்கைகளில் ஈடுபடுவதிலும் தனது பொன்னான நேரத்தை வீணாக்காமல் படிப்பிலேயே குறியாக இருந்து படித்து முதல் மாணவனாகத் தேறி உயர்ந்த உத்தியோகத்தை அடைந்து தனது எதிர்கால வாழ்க்கையை வழமாக ஆக்கிக் கொள்கிறானோ அதே போல் புத்திசாலியான முஸ்லிம் இவ்வுலக வாழ்க்கை பரிட்சை வாழ்க்கை, மறு உலக வாழ்க்கையே அசலான வாழ்க்கை,

அந்த வாழ்க்கைக்காக இவ்வுலகில் தயாராகிக்கொள்வதே அறிவான செயல். இவ்வுலகில் தோல்வியுற்ற மாணவனாவது திரும்பத் திரும்ப பரிட்சை எழுதி வெற்றி பெற முடியும். ஆனால் இவ்வுலக வாழ்வுப் பரிட்சையில் ஒரே முயற்சியில் வெற்றி பெற வேண்டும், அதில் தோல்வியுற்றால் மீண்டும் பரிட்சை எழுதும் வாய்ப்பே இல்லை.

தோல்வியடைந்தால் அதற்கு அப்பீலே இல்லை என்பதை நன்றாகப் புரிந்து நடந்து கொள்வான்.

மனிதனை சோதித்து அறியவே இவ்வுலக வாழ்க்கையில் மனித வாழ்வு ஆதாரங்களான  உண்பது, குடிப்பது, போகிப்பது போன்ற மிக மிக அத்தியாவசிய தேவைகளையே தடுத்து நோன்பு நோற்கக் கட்டளையிட்டுள்ளான்.

 மனிதன் இவ்வுலகில் செய்யும் அட்டூழியங்கள் தவறுகள் பாவமான காரியங்கள் இவை அனைத்தும் கண்டிப்பாக உண்பது, குடிப்பது, போகிப்பது இம்மூன்று அடிப்படைக் காரியங்களைக் கொண்டு ஏற்படுவனவாகவே அமைகின்றன.

மனிதன் இம்மூன்று விஷயங்களில் கட்டுப்பாட்டை மீறி எல்லை கடந்து செல்வதாலேயே இன்று உலகில் காணப்படும் தீயச் செயல்களில் எதை எடுத்துக் கொண்டாலும் இந்த மூன்றில் ஒன்றின் அடிப்படையிலேயே இருக்க முடியும்.

எனவே மனிதன் இந்த மூன்று காரியங்களில் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டால் அவன் மனிதப் புனிதனாக மாறிவிடுவான். அதைத்தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.  (2:183)

அல்லாஹ்விற்காக  அத்தியாவசியத் தேவைகளான சாப்பிடுவது, குடிப்பது, போகிப்பது போன்றவற்றையே தியாகம் செய்து அவற்றை விட்டு ஒதுங்கி இருக்கும் மனிதன் மற்ற அற்பமான காரியங்களில் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறாக நடந்து கொள்வானா? ஒரு போதும் அவ்வாறு செய்ய துணியமாட்டான். எனவே அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்து நடப்பதிலும் ஆகுமான காரியங்களைச் செய்வதிலும் விளக்கப்பட்ட காரியங்களிலிருந்து விலகிக் கொள்வதிலும் நல்லதொரு பயிற்சியை நோன்பு நோற்பது கொண்டு அடைய முடியும்.

Jizak Allahu Khairan Brother Riyaz for sharing this information.

No comments: